திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
1
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
2
மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
3
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
4
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
5
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
6
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
7
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
8
செதுக றாமனத் தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
9
துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com